ஒருபோதும் மறவாத

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே
சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிப்பாருன்னை — ஒருபோதும்

கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்கேட்டால் கடல் புசலமர்த்துவார்
எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார்

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே
கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே
விடுவாளோ பிள்ளையத் தாய் மேதினியிற்றனியே
மெய்ப் பரனை நீ தினம் விசுவாசித்திருப்பாயே

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா
உறக்க மில்லாதவர் கண் உன்னைவிட டொழியுமா
இந்நில மீதிலுனக் கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம்? உருக்கமில்லாதே போமா

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

உலகப் பேயுடலாசை உன்னை மோசம் செய்யாது
ஊக்கம் விடாதே திருவுளமுனை மறவாது
இலகும் பரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது
என்றும் மாறாத நண்பன் இரட்சகருடன் சேர்ந்து

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

Leave a Comment