பல்லவி
வாரும் மகத்துவ முள்ள அரசே!
மனுக்குலத்தை இரட்சிக்கவென்று!
அனுபல்லவி
கேளும் உமதடியார் விண்ணப்பங்களை அன்பாய்!
கேட்டு உமதாவியின் வரங்களைப் பொழிந்திட
1. பாருல குதித்தீரே! பகைஞனை ஜெயித்தீரே!
பாவ விஷ மகற்றப் படுகொலை யடைந்தீரே!
சாவின் கூரொடித்தீரே! தரணியில் உயிர்த்தீரே!
தற்பரனின் வல பாகத்தைத் தெரிந்தீரே! – வா
2. என்னை இரட்சிக்கவென்று உன்னதம் துறந்தவா!
எளியன் மனுவடிவம் ஏற்கவும் மகிழ்ந்தவா!
சென்னி அழுந்திநோக முண்முடி புனைந்தவா!
சிலுவை மரத்தில் இரு கள்வரோடிறந்தவா! – வா
3. கிருபையுடன் என்னிருதயந்தனில் வாரும்!
கேடுபாடுகள் எல்லாவற்றையும் தீரும்!
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்!
பொன்னுலகமதில் என்னையும் சேரும்! – வா