திருமறையின் மொழிகளிலே தேன் வழியும்

திருமறையின் மொழிகளிலே தேன் வழியும் அதன்
அருள் நிறைந்த உரைகளினால் தீங்கழியும்
சரணங்கள்
1. அறுபத்து ஆறாகும் அதன் மணிகள் – அவை
அழியாத அமுதூறும் சுவை கனிகள்
ஒருமித்த நோக்கொன்றே அவை காட்டும் இந்த
உலகோருக் கென்றென்றும் அருள் கூட்டும்
2. இறைமைந்தர் இயேசுவையே எடுத்துரைக்கும் – அதன்
ஏடுகளில் அவர் பெயரே எதிரொலிக்கும்
நிறைவேறும் பாங்கிலவர் வாழ்வடங்கும் அதில்
நிகழ்கால வரலாற்றில் பொருள் விளங்கும்
3. ஆவியினால் நிறைந்தோராம் அடியார்கள் அதை
அவர் காலச் சூழலிலே வரைந்தார்கள்
பூவுலகின் சூழல்களில் மறைபேசும் என்றும்
புது நெறியின் தீபமதாய் ஒளிவீசும்
4. முறையாகத் திருமறையைப் பயின்றிடுவோம் அதன்
முழுப்பொருளை அறிந்திடவே முயன்றிடுவோம்
நிறைவான வாழ்வதனை அடைந்திடவே – மறை
நிழல்படியும் பாதையிலே நடந்திடுவோம்

Leave a Comment