Deasam Ara Yaavum Vara – சேதம் அற யாவும் வர

1. சேதம் அற, யாவும் வர
கர்த்தர் ஆதரிக்கிறார்;
காற்றடித்தும், கொந்தளித்தும்
இயேசுவை நீ பற்றப்பார்.
2. இயேசு பாரார், அவர் காரார்
தூங்குவார் என்றெண்ணாதே
கலங்காதே, தவிக்காதே
நம்பினோனை விடாரே.
3. கண்மூடாத உறங்காத
உன் கர்த்தாவைப் பற்றி, நீ
அவர்தாமே, காப்பாராமே
என்று அவரைப் பணி.
4. உன் விசாரம் மா விஸ்தாரம்
ஆகிலும் கர்த்தாவுக்கு
நீ கீழ்ப்பட்டு, கிலேசமற்று
அவருக்குக் காத்திரு.
5. தெய்வ கைக்கும் வல்லமைக்கும்
சகலமும் கூடாதோ?
எந்தச் சிக்கும் எந்தப் பிக்கும்
அவரால் அறும் அல்லோ
6. சீரில்லாத உன் ஆகாத
மனதுன்னை ஆள்வது
நல்லதல்ல, அதற்கல்ல
கர்த்தருக்குக் கீழ்ப்படு.
7. கர்த்தர் தந்த உன்மேல் வந்த
பாரத்தைச் சுமந்திரு
நீ சலித்தால், நீ பின்னிட்டால்,
குற்றம் பெரிதாகுது.
8. ஆமேன், நித்தம் தெய்வ சித்தம்
செய்யப்பட்ட யாவையும்
நீர் குறித்து, நீர் கற்பித்து,
நீர் நடத்தியருளும்.

Leave a Comment